வருங்கால முதல்வர் போஸ்டர் சர்ச்சை எதிரொலி போஸ்டர் அடிக்கும்போது பாத்து அடிங்க.. பாஜவினருக்கு நயினார் வேண்டுகோள்

21 hours ago 4

சென்னை: விளம்பரத்தில் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும், கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று பாஜவினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜவுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான திருநெல்வேலியில், அவருடைய ஆதரவாளர்கள், அவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்து ஒட்டினர். அந்த போஸ்டர்களில் நயினார் நாகேந்திரனை, ‘வருங்கால முதல்வரே’ என குறிப்பிட்டு, வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இது அதிமுக,வினரை கோபமடைய செய்தது. இது பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து பாஜவினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆர்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர உங்கள் ஆர்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது. இது தவிர சுவர் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும். நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக் கூட்டணி என்பது நம் பலம் அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிப்பார்கள், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது என்று அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ‘எந்த நேரத்திலும் பதவி போகலாம்’
திருவண்ணாமலையில் நேற்று வேலூர் கோட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், ‘இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டுக்கு மீண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர திட்டமிட்டு இருக்கிறார். அமித்ஷா வருகையின் போது மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. மேலும், கட்சி நிர்வாகிகள் நாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டும். வருங்கால முதல்வர், வருங்கால துணை முதல்வர் என என்னை அழைக்கக்கூடாது. நான் பொறுப்பேற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது. என்னுடைய பதவி எந்த நேரத்திலும் போய்விடலாம். எனவே, பாரத்மாதா கி ஜே, ஜெய்ராம் என்றுதான் முழக்கமிட வேண்டும்’ என்றார். தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.

The post வருங்கால முதல்வர் போஸ்டர் சர்ச்சை எதிரொலி போஸ்டர் அடிக்கும்போது பாத்து அடிங்க.. பாஜவினருக்கு நயினார் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article