இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்: எலான் மஸ்க் தகவல்

4 weeks ago 10

வாஷிங்டன்: பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய வருகை குறித்து தெரிவித்துள்ளார்.

தன்னுடன் பேசியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவினை இணைத்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க், பிரதமர் மோடியுடன் பேசியது மிகவும் பெருமைக்குரியது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்குடன் உரையாடியது தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவொன்றில் எலான் மஸ்குடன் பேசினேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நாங்கள் சந்தித்தபோது பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போது பேசினோம். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைகளில் ஒத்துழைப்புகளுக்கான மகத்தான ஆற்றல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கட்டண விதிப்புகளில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதற்கு முயற்சித்து வரும் வேளையில் பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க் இடையேயான உரையாடல் நிகழ்ந்தது. கூடவே, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், இந்திய மின்சார வாகனச் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையிலும் இந்த உரையாடல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்: எலான் மஸ்க் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article