புதுடெல்லி: அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேக விழா வருகின்ற 5ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. இதன் பின்னர் கோயில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார் கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டுமான பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன.
இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
இது குறித்து ஸ்ரீராம் ஜென்மபூமி கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், ‘‘பிரமாண்டமாக எதிர்பார்க்கப்படும் ராம் தர்பாரின் கும்பாபிஷேக விழா ஜூன் 5ம் தேதி நடைபெறுகின்றது. இதற்கான சடங்குகள் ஜூன் 3ம் தேதி தொடங்கும். இந்த முறை விழாவில் இடம்பெறும் விருந்தினர்கள் பட்டியல் வித்தியாசமாக இருக்கும். மாநில, ஒன்றிய அரசின் முக்கிய பிரமுகர்கள் விழாவில் இடம்பெற மாட்டார்கள். கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு இருக்கும் 7 கோயில்களுக்கான விழாவும் அதே நாளில் நடைபெறும்” என்றார்.
* 20.கி.மீ.க்கு ‘பரதன் பாதை’
உத்தரப்பிரதேசத்தில் ராமரின் சகோதரரான பரதன் தவம் செய்ததாக கூறப்படும் பாரத்குண்டை அயோத்தி ராமர் கோயிலுடன் இணைக்கும் வகையில் பரதன் பாதை என்ற ஆன்மிக புதிய வழித்தடத்தை அயோத்தியில் கட்டுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு முன்மொழிந்துள்ளது. ரூ.900 கோடி மதிப்பீட்டில், அரசின் ஒப்புதலுக்காக முன்மொழிவை பொதுப்பணித்துறை சமர்ப்பித்துள்ளது. இந்த பாதை பக்தர்களுக்கு மேம்பட்ட அணுகலையும், ஆழமான ஆன்மிக அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
The post வருகிற 5ம் தேதி அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேகம்: மாநில, ஒன்றிய அரசு விஐபிக்களுக்கு அழைப்பு இல்லை appeared first on Dinakaran.