திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு அழகூட்டி நிற்பவை அக்கோயிலின் திருக்கோபுரங்களே. அவற்றுள் கம்பீரமாய்த் திகழ்வது 217 அடி உயரத்தில் திகழும் கிழக்கு ராஜகோபுரமே. வெளித் திருமதிலில் கிழக்கு பதினொரு நிலை ராஜகோபுரத்தை அடுத்து தெற்குத் திசையில் ஒன்பது நிலைகளுடன் திருமஞ்சனக் கோபுரம் திகழ்கின்றது. இதே திருமதிலின் மேற்கு வாயிலாக எட்டு நிலைகளையுடைய பேய்க் கோபுரமும், வடதிசையில் பத்து நிலைகளையுடைய அம்மணி அம்மாள் கோபுரமும் உள்ளன.
வெளிமதிலை அடுத்துள்ள திருமதிலில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு ஆறு நிலைக் கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் வள்ளாள கோபுரம் என அழைக்கப்பெறுகின்றது. தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் நான்கு நிலைகளுடன் காணப்பெறுகின்றன. இவற்றை அடுத்து மூன்றாம் திருமதிலினை கிளிக்கோபுரம் எனும் ஆறு நிலைக் கோபுரம் அணி செய்து நிற்கின்றது. இந்த ஒன்பது கோபுரங்களுமே கலைப்பாணியால் ஒத்த தன்மையுடையவைகளாகவே விளங்குகின்றன.
திருவண்ணாமலை திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு முன்பு உள்ள கற்பலகையில் கி.பி. 1517ல் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அதில் திருவண்ணாமலையுடைய நாயனார்க்கும் நாச்சியார் உண்ணாமுலை அம்மைக்கும் கிருஷ்ண ராய மகாராயர் தர்மமாக பண்ணுவித்த திருப்பணி என்று குறிப்பிட்டு ஒரு பட்டியல் காணப்பெறுகின்றது. அதில் பதினொரு நிலைக் கோபுரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனவே, கிழக்கு ராஜகோபுரம் எடுப்பிப்பதற்கு நிவந்தம் அளித்தவர் கிருஷ்ணதேவராயர் என்பது அறிய முடிகிறது. ஆனால், அப்பணியைச் செய்து முடித்தவர் தஞ்சை நாயக்க அரசர் செவ்வப்ப நாயக்கரேயாவார். சிவநேசர், லோகநாதர் என்ற இரு தபஸ்விகளின் விருப்பத்திற்கிணங்க செவ்வப்ப நாயக்கர் பதினொரு நிலை கிழக்கு ராஜகோபுரத்தை எடுத்தார் என்பதை அக்கோபுரத்திலுள்ள மூன்று பாடல் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. அப்பாடல்களாவன:
‘‘தானேற்றமாக சகாத்தம் ஆயிரத்து
நானூற்றுத் தொண்ணூற்று நாலின் மேல் – மானேற்ற
தென்னருணை நாதருக்கு செவ்வமகிபன் கயிலை
யன்னதொரு கோபுரங்கண்டான்
மருவு சிவநேசன் மகிழ் உலகநாதன்
இருவரும் பேரன்பால் இயற்ற அருணையிலே
மானபரன் செவ்வ மகிபாலன் பதினொன்
றான நிலைக் கோபுரங் கண்டான்
இருபுறமு மீனமெழுது புலியிட்
டருவரையிற் பேரெழுதவையத் – தொருவரையை
வைத்ததெனச் செவ்வ மகிபாலன் தென்னருணை
அத்தருக்குக் கோபுரங் கண்டான்’’
– என்ற மூன்று கல்வெட்டுப் பாடல்களையும் காலிங்கராயன் உண்ணாமுலை எல்லப்ப நாயினார் இயற்றியதாக உள்ள குறிப்பும் அக்கல்வெட்டு பாடலின்கீழ் உள்ளது. இவற்றின் அருகில் உள்ள வடமொழிக் கல்வெட்டுப் பாடல் ஒன்றில் கவி னிவாச தீட்சிதர் கிழக்கு ராஜ கோபுரமான பதினொரு நிலைக் கோபுரத்தை செவ்வப்ப நாயக்கர் எடுப்பித்தார் என்ற தகவல் கூறப்பெற்றுள்ளது.
இக்கல்வெட்டுப் பாடல்கள் அருகிலுள்ள மற்றொரு கல்வெட்டுச் சாசனத்தில் திருமலைதேவ மகாராயரின் ஆட்சிக் காலத்தில் சகாப்தம் 1492ல் பிரமோதூத வருடம் மகர மாதம் பூர்வபட்ச தசமியும் சோமவாரமும் பெற்ற புனித நாளில் இக்கோபுரத் திருப்பணிக்காக செவ்வப்ப நாயக்கர் பல கிராமங்களை அளித்ததுபற்றி விவரிக்கப் பெற்றுள்ளது.
செவ்வப்ப நாயக்கரால் பல கிராமங்கள் கொடுக்கப்பெற்று தபசிகள் இருவர் துணையுடன் எடுக்கப்பெற்ற இந்நெடுங் கோபுரத்திற்கு செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் முனைந்து ஆங்கீரச ஆண்டு கார்த்திகைத் திங்கள் புதன்கிழமை முழுமதி நாள், ரோகிணி விண்மீனுடைய புனித நாளில் பொற்கலசங்களைப் பிரதிட்டை செய்தார் என்ற செய்தியினை இதே கோபுரத்திலுள்ள மற்றொரு வடமொழி கல்வெட்டுச் சாசனம் எடுத்தியம்புகின்றது.
செவ்வப்ப நாயக்கரும் அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எடுத்த திருவண்ணாமலை ராஜகோபுரத்தின் பேரழகைக் கண்டு களித்த சத்தியமங்கலம் னிவாச தீட்சிதர் ஒரு அழகிய கல்வெட்டுப் பாடலை இதே கோபுரத்தில் வடமொழி கல்வெட்டாக பொறிக்கச் செய்துள்ளார். அதில் தாம் கண்ட காட்சிகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘‘மேகக் கூட்டங்கள் சூழும்போது செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பெற்ற இக்கோபுரம் கருவுற்ற கார்முகிலின் வயிற்றிலிருந்து பிறந்து இப்புவி மேல் விழுவது போன்றுள்ளதே! செவ்வப்பன் எடுத்த இக்கோபுரத்தின்மீது கதிரவனின் கிரணங்கள்பட்ட அளவிலேயே மக்கள் துயில் விழிக்கத் துவங்கி விடுகின்றனரே! செவ்வப்பன் எடுத்த இக்கோபுரம் காயும் நிலவொளியில் கனகமுத்துவெனத் திகழ்கின்றதே!
கோபுரக் கலசங்களின் பொன்னொளி மேரு மலையை ஒத்து விளங்குகின்றதே! இக்கோபுரமோ வெண்பனியிடை இயமகிரியன்ன துலங்குகின்றதே!
செவ்வப்பன் எடுத்த எழில்மிகு இக்கோபுரம் விண்மீன் ஒளியிடை வியத்தகு காட்சியல்லவா!’’ எனப் பலபட வியந்து குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நேரங்களில் அக்கோபுரம் எவ்வாறு திகழ்ந்தது என்பதை அவர் பாடல் விவரிப்பதோடு செவ்வப்ப நாயக்கரால் அக்கோபுரம் எடுக்கப்பெற்றது என்ற வரலாற்றுத் தகவலையும் பதிவு செய்கின்றது.
கிருஷ்ண தேவராயரின் கொடையால் தொடங்கப்பெற்ற இப்பதினொரு நிலைக் கோபுரப்பணி செவ்வப்ப நாயக்கரால் நிறைவேற்றப்பெற்று அச்சுதப்ப நாயக்கரின் பொற்கலசக் கொடையால் கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது என்பதை அறிகிறோம். இக்கோபுரத்தில் உள்ள 21 கல்வெட்டுகள் செவ்வப்ப நாயக்கரின் பணியை பலபட விவரிக்கின்றன.
எழில்மிகு இக்கோபுரத்தின் கீழ்நிலை ஆவர்ணத்தில் ஆதிசண்டேஸ்வரர், துவாரபாலகர்கள், தன்வந்திரி, நாகராஜர், மகிஷாசுரமர்த்தினி, நான்கு முகங்களோடு சூரிய தேவன், மயில் மீதமர்ந்த முருகன், அன்னத்தின் மீது அமர்ந்த பிரமன், அகத்தியர் போன்ற தெய்வ உருவங்கள் உள்ளன.
மேல்நிலை ஆவர்ணத்தில் திரிபுராந்தகர், அர்த்தநாரி, பிச்சை தேவர், ராவண அனுக்கிரகமூர்த்தி, துவாரபாலகர்கள், வாள் ஏந்திய சிவபெருமான், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், கஜசம்ஹாரர், விருஷபாரூடர், கங்காளர், லிங்கோத்பவர், விருஷபாந்திகர், கல்யாணசுந்தரர், ஹரிஹரர், கங்காதரர் போன்ற சிவமூர்த்தங்கள் இடம்பெற்றுத் திகழ்கின்றன.
-முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post வரலாற்று நோக்கில் அண்ணாமலை ராஜகோபுரம் appeared first on Dinakaran.