ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் பரஸ்பரம்: 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம்: உடனடி போர் நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு

3 hours ago 3

இஸ்தான்புல்: ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையின் முடிவில் 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உடனடி போர் நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. துருக்கியின் இஸ்தான்புல்லில் இருக்கும் டோல்மாபாஹ்ஸ் அரண்மனையில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தலைமையேற்றார்.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான குழுவும், ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழுவும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அப்போது இரு தரப்புகளும் எதிர்கால போர் நிறுத்தத்திற்கான தங்கள் திட்டங்களை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, எழுத்து வடிவில் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடி சந்திப்பு நடத்த வேண்டும் என்று கோரியதை ரஷ்யா கவனத்தில் கொண்டுள்ளது என்று புடினின் ஆலோசகர் மெடின்ஸ்கி கூறினார். ஆனால், உக்ரைனின் 30 நாள் உடனடி போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்ததால், முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கைகளில், கைப்பற்றப்பட்ட உக்ரைனின் பிரதேசங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஏற்க முடியாத நிபந்தனைகளாக உக்ரைன் விமர்சித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையானது, துருக்கி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தால் நடந்தாலும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள், ரஷ்ய அதிபர் புடினுக்கு அமைதி பேச்சுவார்த்தைகளில் ஆர்வமில்லை என்று குற்றம்சாட்டுகின்றன.

The post ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் பரஸ்பரம்: 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம்: உடனடி போர் நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article