சென்னை: வரத்து அதிகரிப்பு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஒரு கிலோ பூண்டு ரூ.500 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான சமையல் வகைகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் சமைக்கப்படுவதில்லை. குறிப்பாக, அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணிக்கு இவை முக்கியமான பொருளாகும்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக பூண்டின் விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.500ஆக அதிகரித்து காணப்பட்டது. பூண்டில் பொடி, பூனா லட்டு, லட்டு, முதல்தரம் என பல வகைகள் உள்ளன. இதில் ஏழை எளிய மக்கள் வாங்கும் பொடி பூண்டு தற்போது ரூ.205லிருந்து ரூ.240 ஆகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் லட்டு வகை பூண்டு ரூ.330லிருந்து ரூ.400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த பூண்டு தான் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் முதல்தர பூண்டு கிலோ ரூ.440லிருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே விலையில்தான் பூண்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post வரத்து அதிகரிப்பு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை கடும் சரிவு: கிலோ ரூ.500லிருந்து 150க்கு வந்தது appeared first on Dinakaran.