வயிற்றுவலி காரணங்களும் தீர்வுகளும்!

3 weeks ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

இரைப்பை, குடல் நிபுணர் ஆர்.கண்ணன்

இன்றைய வாழ்க்கை சூழலில் வயிற்றுவலி உண்டாக பல காரணங்கள் உள்ளன. உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மற்றும் வயிற்றில் உள்ள உறுப்புகளின் கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும். மருத்துவர்களாகிய நாங்கள் அன்றாடம் வயிற்றுவலியுடன் அவதிப்படும் நோயாளிகளை அதிகமாக பார்க்கின்றோம்.?

வயிற்றுவலி ஏன் வருகின்றது?
எல்லா வயிற்றுவலியும் ஆபத்தானதா?

வயிற்றுவலி என்பது நெஞ்சுப் பகுதிக்கும் pelvis – க்கு இடையில் உள்ள வயிற்றுப் பகுதியில் வரும் வலியாகும். இந்த வலியானது மிதமாகவோ, மிகவும் அதிகமாகவோ அல்லது இழுத்துப் பிடிப்பது போலவோ இருக்கலாம். வயிற்றினுள் இருக்கும் முக்கியமான உறுப்புகளான வயிறு, பித்தப்பை, குடல் வால், சிறுநீரகம், கணையம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் குடல் (சிறுகுடல் மற்றும் பெருங்குடல்) போன்றவைகளில் பாதிப்புகள் வரும்போது அதன் தன்மையைப் பொறுத்து வரும் வலி வேறுபடும்.

வயிற்றுவலி ஏன் உண்டாகின்றது?

வயிற்றுப் புண், பித்தப்பை கல், குடல் வால் அழற்சி, உறுப்புகளில் ஏற்படும் அழற்சி (inflammation), குடல் நோய்கள், கட்டிகள் மற்றும் அடைப்பு காரணமாக வயிற்றுவலி உண்டாகும். வைரஸ், பாக்டீரியா (Abdominal Tuberculosis), (Amoebiasis Giardiasis) மற்றும் குடல் புழுக்களின் காரணமாக வயிறு மற்றும் குடலில் உண்டாகும் தொற்றின் காரணமாகவும் வயிற்றுவலி உண்டாகும்.

அடிக்கடி ஓட்டலில் உணவு உண்பது, நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது, மசாலா மற்றும் எண்ணெய் அதிகம் கலந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, ஜங்க் புட் வகைகள் மற்றும் பேக்கரி உணவு வகைகள் அதிகமாக எடுத்துக்கொள்வதாலும் வயிற்று வலி உண்டாகும். பொதுவாக குழந்தைகளுக்கு குடல் புழுக்கள், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், குடலில் நெறிக்கட்டுதல் மற்றும் வயிற்றுப்புண், வயிற்றுப் போக்கு காரணமாக வலி ஏற்படும். ஏற்கெனவே வயிற்றில் அறுவைசிகிச்சை செய்திருந்தால் வயிற்றில் உள்ள குடலோ அல்லது கொழுப்பு படலமோ வயிற்றினுள் ஒட்டி (Adhesions) கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனாலும் வயிற்றுவலி உண்டாகலாம் .

வயிற்றுவலியின் வகைகள்

வயிற்றுவலி பல வகைப்படும். அது வரும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். Localised Pain என் புது ஒரே இடத்தில் மிதமாகவோ அல்லது அதிகமாகவோ வலி இருப்பது. இது அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள உறுப்புகளில் உள்ள கோளாறுகளால் உண்டாகும். பெரும்பாலும் இதுபோன்ற வலி வயிற்றுப்புண், குடல்வால் அழற்சி, பித்தப்பை கல் மற்றும் அழற்சி, சிறுநீரகக் கற்களினால் உண்டாகும்.

Crampy அல்லது இழுத்துப்பிடிப்பது போன்ற வலியானது பேதி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் காரணமாகவும், பெண்களின் மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கரு உறுப்புகளின் கோளாறுகளாலும் உண்டாகும். Colicky Pain என்பது பிரட்டுவது (அ) பிழிவது போன்ற வலியானது பித்தப்பை கல் மற்றும் சிறுநீரகக் கல் மற்றும் குடல் அடைப்பினால் ஏற்படும்.
Generalised Pain (அ) வயிறு முழுவதும் ஏற்படும் வலியாகும். இது போன்ற வலி குடல் அடைப்பு, குடல் ஓட்டை விழுதல், முற்றிய நிலையில் உள்ள கணைய அழற்சி, குடல்வால் அழற்சி மற்றும் பித்தப்பை அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் ஏற்படும்.

மேல்வயிறு

மேல்வயிற்றில் ஏற்படும் வலியானது பெரும்பாலும் வயிற்றுப்புண், ஜீரணம், பித்தப்பை கல், பித்தப்பை அழற்சி, கணைய அழற்சி, நிமோனியா எனப்படும் நுரையீரல் நோயினாலும் உண்டாகும். நிமோனியா நுரையீரல் நோய், சிறுநீரகக் கல் மற்றும் கல்லீரல் சீழ் கட்டி மற்றும் கல்லீரல் அழற்சியினால் ஏற்படும்.

மேல்வயிற்றின் வலதுபுறம் ஏற்படும் வலி

மேல்வயிற்றின் வலதுபுறம் ஏற்படும் வலி பொதுவாக பித்தப்பை கல் மற்றும் அழற்சி, வயிற்றுபுண், சிறுநீர்ப்பாதை கல் (வலதுபுறம்), சிறுநீரகக் கல் ஆகியவற்றால் உண்டாகும். அடிவயிற்றில் ஏற்படும் வலியானது பெரும்பாலும் குடல்வால் அழற்சி, குடலிறக்கம் (ஹெர்னியா) eptopic pregnancy சிறுநீர்த் தொற்று, சிறுநீர்ப்பை அழற்சி, ஐபிஎஸ் எனப்படும் குடல் அழற்சி நோய், குடல் புண்நோய் (inflammatory bowel disease) சிறுநீர்ப்பாதை கற்கள் ஆகியவற்றால் உண்டாகும்.பொதுவாக அடிவயிற்றின் வலதுபுறம் ஏற்படும் வலியானது குடல் வால் அழற்சி, குடலிறக்கம், crohns disease, ileocaecal TB, பெருங்குடல் புண் மற்றும் சிறுநீரக பாதை கல் அடைப்பு ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

எப்பொழுது மருத்துவரை நாட வேண்டும்

பெரும்பாலும் மிதமான வயிற்று வலியானது மருந்துகள் இல்லாமல், உணவு மூலமாகவே சரியாகிவிடும்.

ஆனால், கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனைகள் செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதே நல்லது.

24 மணி நேரத்திற்கு மேல் வயிற்றுவலி தொடர்ந்தாலோ வாந்தி அல்லது குமட்டல் இருந்தாலோ நாள்பட்ட மலச்சிக்கல் இருந்தாலோ காய்ச்சல், பசியின்மை இருந்தாலோ உடல் எடை அதிகமாக குறைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

வயிற்றுவலியின் காரணங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?

வயிற்றுவலி எதனால் வந்தது என்பதை சில பரிசோதனைகள் செய்தும் மற்றும் வயிற்றினை அழுத்திப்பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளில் எது அவசியமானதோ அதனை செய்து அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் மூலம் கற்கள், (பித்தப்பை, சிறுநீரகம்), குடல் அழற்சி, கணைய அழற்சி, கட்டி, குடல் மற்றும் கர்ப்பப்பை கட்டிகள் போன்ற வயிற்று வலிக்கு காரணமான உறுப்புகளின் பாதிப்புகளை அறிந்துகொள்ளலாம்.எண்டோஸ்கோபி எனப்படும் பரிசோதனை மூலம் உணவுக் குழாய் புண், வயிற்றுப் புண் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

கோலோனோஸ்கோபி எனப்படும் பரிசோதனை மூலம் குடல் முழுவதும் பரிசோதித்து குடல் புண், அழற்சி, மலக்குடல் புண், குடல் புற்றுநோய் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.ரத்தப் பரிசோதனை, மலம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்வதன் மூலம் வைரஸ் மற்றும் பாக்டீரியா அல்லது குடல் புழுக்களினால் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

வயிற்றுவலி வராமல் எப்படி தடுக்கலாம்?

எல்லா வயிற்றுவலியையும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நம் வாழக்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை கீழ்க்கண்டவாறு பின்பற்றினால் பெரும்பாலும் தடுக்க முடியும். வயிற்றுவலியின் தன்மையினையும் அதனால் வரும் பின்விளைவுகளையும் தடுக்க முடியும்.

சத்தான உணவுகளை உண்ண வேண்டும். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். குறைவான உணவினை குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்ண வேண்டும். உடற் பயிற்சி செய்தல் மிகவும் அவசியம். தேவையான அளவு தூக்கம் அவசியம்.குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வது மிகமிக சிறந்தது.

The post வயிற்றுவலி காரணங்களும் தீர்வுகளும்! appeared first on Dinakaran.

Read Entire Article