வயநாடு மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்: பிரியங்கா காந்தி

2 months ago 13

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.

இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடன் சென்று கடந்த 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், காங்கிரசார் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் வயநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து, சுல்தான்பத்தேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வயநாட்டு மக்களை நான் ஏமாற்ற மாட்டேன்; அவர்களுக்காக கடுமையாக உழைப்பேன். வேலையில்லா திண்டாட்டம், நீர் பிரச்சினை உள்ள பல்வேறு பிரச்சினைக்கள் உள்ளன. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் வயநாட்டு மக்களுடனான எனது தொடர்பு முறிந்துபோகாது.

பெண்கள், விவசாயிகள், பழங்குடியினரின் தேவைகளை புரிந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களை சந்தித்து அவர்களுடன் பேசி, தேவைகளை புரிந்து திட்டங்களை உருவாக்குவேன். சாமானியர்களுக்கு ஆதரவாக இல்லாமல் பிரதமர்மோடி நண்பர்களுக்கு சாதகமாக கொள்கைக்கு பின் கொள்கை வகுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article