
தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குநராக பிரவீன் சூட் உள்ளார். இவரது பதவிக் காலம் வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மத்திய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரவீன் சூட்டின் பதவிக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவரது பதவிக்காலம் வருகிற 25-ந்தேதிக்கு அடுத்து ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அந்த குழுவின் செயலாளர் மணீஷா சக்சேனா வெளியிட்டுள்ளார்.