
டெல்லி,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜுலை 30ம் தேதி கனமழையுடன், கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தின் அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் சின்னாபின்னமாகின.
இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இதில் பலர் மாயமானதாகவும் தகவல்கள் பரவின. நிலச்சரிவு ஏற்பட்டு 8 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நிலச்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
அதன்படி, வயநாடு நிலச்சரிவில் மொத்தம் 298 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணைமந்திரி நித்யானந்த் ராய் கூறுகையில், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் தொடர்பான உயிரிழப்பு தரவுகளை மத்திய அரசு சேமிப்பது இல்லை. வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசிடம் கேரள அரசு தெரிவித்துள்ளது. 298 பேரில் 32 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் அவர்களும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.