அனாதையாக கிடந்த குழந்தையை தூக்கி வளர்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி... இன்ஸ்டா சாட்டால் தெரிய வந்த கொடூரம்

3 hours ago 2

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 14 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் கிடந்துள்ளது. அதனை ராஜலட்சுமி (வயது 54) மற்றும் அவருடைய கணவர் தூக்கி வந்தனர். குழந்தை இல்லாத அந்த தம்பதி அந்த குழந்தையை தங்களுடைய குழந்தையாக வளர்த்தது.

ஓராண்டில் கணவர் இறந்து விட, ஒற்றை ஆளாக பெண் குழந்தையை ராஜலட்சுமி வளர்த்து வந்துள்ளார். அவர் நன்றாக படிக்க வேண்டுமென விரும்பிய ராஜலட்சுமி பரலாகேமுண்டி பகுதிக்கு இடம் பெயர்ந்து, வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளார். அவரை கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். 13 வயதுடைய அந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நாளடைவில் அந்த சிறுமிக்கு தன்னை விட அதிக வயதுடைய கோவில் பூசாரியான ராத் (வயது 21) மற்றும் தினேஷ் சாகு (வயது 20) ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு ராஜலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், அவருக்கும் சிறுமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராஜலட்சுமியை கொலை செய்யும்படி சிறுமியை, ராத் தூண்டியுள்ளார். அவரை கொன்று விட்டால் எதிர்ப்பு எதுவுமின்றி உறவை தொடரலாம் என்றும் தங்க நகை உள்ளிட்ட சொத்துகளை அடையலாம் என்றும் ஆசை காட்டியுள்ளார்.

இதன்படி, கடந்த ஏப்ரல் 29-ந்தேதி இரவில், வளர்த்த தாய்க்கு தூக்க மருந்துகளை சிறுமி கொடுத்துள்ளார். அவர் சுயநினைவு இழந்ததும், ராத் மற்றும் சாகுவை சிறுமி அழைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து தலையணைகளால் அழுத்தி ராஜலட்சுமியை கொலை செய்துள்ளனர்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அந்த சிறுமி, குடும்பத்தினரிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் ராஜலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என கூறியுள்ளார். ஏற்கனவே ராஜலட்சுமிக்கு இதய பாதிப்பு இருந்துள்ளது. இதனால், அதுபற்றி கேள்வி எதுவும் எழவில்லை.

இந்நிலையில், 2 வாரம் கழிந்த நிலையில் சிறுமி விட்டு சென்ற மொபைல் போன் ராஜலட்சுமியின் சகோதரர் சிபா பிரசாத் மிஷ்ராவுக்கு கிடைத்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில், இன்ஸ்டாகிராம் உரையாடல்களை கவனித்துள்ளார். அதில் கொலை திட்டம் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது.

ராஜலட்சுமியை கொலை செய்து, அவருடைய நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வது என பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னரே சிறுமி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குழந்தையில்லாத அந்த பெண், சாலையில் கிடந்த குழந்தையை தூக்கி, வளர்த்த நிலையில், தவறான சகவாசத்தில் வளர்ப்பு தாயை கொலை செய்து சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article