வயதை 53ல் இருந்து 23 ஆக குறைக்கலாம்!

1 week ago 4

நன்றி குங்குமம் தோழி

‘‘ஏறக்குறைய எனது 39வது வயதில் இறந்துவிட்டேன் என்றே சொல்லலாம்… பிறகு சுதாரித்துக் கொண்டு நான் கண்டுபிடித்த வழிகள் மூலமாக 53 வயதை 23 ஆகக் குறைத்துள்ளேன்” என்கிறார் டாக்டர் அல்கா பட்டேல். வயது என்ன எடையா? நினைக்கும் போது குறைப்பதற்கு..! கூடினால் குறையாதது… குறைக்க முடியாதது வயது மட்டுமே..! இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
லண்டனில் வாழும் இந்தியர்தான் டாக்டர் அல்கா பட்டேல். பொது மருத்துவரான இவருக்கு 53 வயதாகிறது. இவர் நம்முடைய வாழ்க்கை முறைகளில் சில விஷயங்களை கடைபிடித்தால் நம்முடைய இளமையான வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறுகிறார். அவர் கடைபிடித்த ‘ஆறு’ டிப்ஸ்களை பின்பற்றினால் என்றும் இளமையாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

‘‘அன்று எனக்கு 39 வயது. வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நான் திடீரென்று சரிந்து விழுந்தேன். டாக்டரான என்னால் எனக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்கான காரணம் புலப்படவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நேரமாக என் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்தது. உள் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. விடிந்தால் என் குழந்தைகளை பார்க்க உயிருடன் இருப்பேனா என்று எனக்கே சந்தேகம் ஏற்பட்டது. அந்த தருணம் என் மனதில் பயம் தொற்றிக் கொண்டது. உடல் முழுதும் நடுங்கியது.

உக்கிர காய்ச்சலின் காரணத்தை கண்டறிய உடலின் பல இடங்களில் திசுக்களை பயாப்சிக்காக சுரண்டி எடுத்தனர். ஆனால் காய்ச்சல் வந்ததற்கான காரணம் மர்மமாகவே இருந்துவிட்டது. உடலின் பல இடங்களில் வடுக்கள் ஏற்பட்டதுதான் மிச்சம். காய்ச்சல் குறைந்து படிப்படியா நான் பழைய நிலைக்கு திரும்பினாலும் அந்த அனுபவம் என் வாழ்க்கைமுறையை மறுவரையறை செய்தது” என்று கூறும் அல்கா ‘பயோஹேக்கிங்’, நீண்ட ஆயுளுக்கான அறிவியல் குறித்து விவரித்தார்.

போதுமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை, உடல் இயக்கம், நினைவாற்றல், அர்த்தமுள்ள உறவுகள், ஊட்டச்சத்துள்ள உணவுகள் என தன் வாழ்க்கை நடைமுறையில் செய்த சின்ன மாற்றம் தன் ஆயுளை அதிகரித்தது மட்டுமில்லாமல், இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும் என்று சொல்கிறார். ‘‘இன்று இளமையாக இருக்க வயதைக் குறைக்கக்கூடிய நுட்பங்களுக்கு செலவு செய்கிறார்கள். நான் ‘உயிரியல்’ மூலம் அதை செய்திருக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்றில்லாமல், உயிரியல் வயது என்பது ஒருவரின் அணுக்கள், உடல் உள்கட்டமைப்பு எந்த அளவுக்குச் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை பொறுத்து அமையும்.

வயதானாலும் இளமை தோற்றத்துடன் சிலர் இருப்பார்கள். அதே போல் பார்க்க வயதானவர்கள் போல் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு குறைந்த வயது இருக்கும். இளம் வயதில் ஒருவரின் செல்கள், திசுக்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் அவரின் இதய ஆரோக்கியம், மூளைக்கூர்மை, சரும பளபளப்பு மூலம் வெளிப்படும். முதுமையை நெருங்கும் போது இளமையாக மாறுவது குறித்து நான் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

20 ஆண்டுகளாக பொது மருத்துவராக பணிபுரிந்த நான், இன்று நீண்ட ஆயுள் மருத்துவத்திற்கு மாறியுள்ளேன். மேம்பட்ட மருத்துவ பரிசோதனை, வாழ்க்கை முறைகள் மாற்றம் மூலம் ஆரோக்கியமாகவும் இளமையுடன் வாழ உதவி வருகிறேன். கடுமையான காய்ச்சலில் இருந்து குணமடைந்த எனது வாழ்க்கையை மாற்றி அமைக்க நான் ஆறு விஷயங்களை கடுமையாக பின்பற்றினேன்.

* உடலில் செயல்படும் கடிகாரத்தை மீட்கவும், எண்ணங்களை சீர் செய்யவும் காலை சூரிய ஒளியில் 10 வினாடிகள் கண்களை மூடியபடி இருக்க வேண்டும்.
* இரண்டு நிமிடங்கள் நடக்கவும், பின்னர் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க 20 வினாடிகள் வேகமாக ஓட வேண்டும்.
* நாள் முழுவதும் உடலின் நீர் அளவு நிலையாக இருக்க வேண்டும். அதற்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.
* மனநலனை மேம்படுத்த தினமும் நீங்கதான் பெஸ்ட் என்று பாராட்டிக் கொள்ள வேண்டும்.
* ஐம்பது வினாடிகள் உடற்பயிற்சி செய்யலாம். இயல்பான நடமாட்டத்திற்கு உதவும்.
* மன அழுத்தத்தைக் குறைக்க ஒவ்வொரு மணி நேரம் ஒரு நிமிட நேரத்திற்கு சுவாசிப்பதை ஆறு சுவாசங்களாக குறையுங்கள்.

இந்தப் பயிற்சிகளுடன், அவ்வப்போது ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். இதய ஆரோக்கியம், மூளைக் கூர்மை, சருமத்தில் தன்னால் மாற்றம் தென்பட ஆரம்பிக்கும். பாரம்பரிய முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, நோய்க்கு சிகிச்சையளிப்பதைச் சுற்றியே இன்றைய மருத்துவம் கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய இந்தப் பயிற்சியின் அடிப்படை குறிக்கோள் நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்ல, அந்தக் காலங்களில் எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் டாக்டர் அல்கா படேல்.

தொகுப்பு: பாரதி

 

The post வயதை 53ல் இருந்து 23 ஆக குறைக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article