
மதுரை,
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே சீகுபட்டி கிராமம் சகாயம் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அந்த பெண், மணிகண்டனை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். இதையடுத்து மணிகண்டன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் அதே ஊரை சேர்ந்த தூய்மை பணியாளர் மயிலம்மாள் (45) என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதையடுத்து அவர் தனது கணவரை விட்டு பிரிந்து மணிகண்டனுடன் தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினார்.
மயிலம்மாளின் கணவர் மற்றும் உறவினர்கள் அவர்கள் இருவரையும் கண்டித்தனர். மேலும் மணிகண்டனின் உறவினர்கள் வயது மூத்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு வற்புறுத்தினார்கள், இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனும், மயிலம்மாளும் தான் தங்கி இருந்த வீட்டை விட்டு வெளியேறினார்கள். மணிகண்டன் வீட்டில் ஆட்கள் இல்லாததால் அவர்களை உறவினர்கள் தேடினார்கள்.
அப்போது வீட்டு அருகே உள்ள ஒரு வேப்பமரத்தில் கள்ளக்காதல் ஜோடி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.