வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்

3 weeks ago 6

திண்டிவனம், டிச. 27: வரும் 6ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளி யார் என்று கூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நடைபெற்றது. சிபிசிஐடி அதிகாரி கல்பனா விசாரணை அதிகாரியாக நியமித்து வழக்கு மாற்றப்பட்டும் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றம் கேள்வி கேட்டும் காவல்துறை பதில் சொல்லவில்லை. ஒவ்வொரு மாதமும் காவல் துறை அவகாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் குற்றவாளி யார் என ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். பட்டியலினத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் கொடுத்த இட ஒதுக்கீட்டை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வரும் 6ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.

பாமகவின் கொள்கை வழிகாட்டி அம்பேத்கர் தான். இந்தியாவிலே கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கட்சி பாமக. சென்னை கிண்டி மருத்துவமனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும். அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு அம்பேத்கரின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 15 குற்றவழக்குகள் உள்ளதாக காவல்துறை சொல்கிறது. இதற்கு கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார்.

பொறுப்புள்ள அமைச்சர் இப்படி சொல்லலாமா?
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. 2015 ஏக்கர் இடத்தில் 193.215 ஹெக்டேர் இடத்தை பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் இத்திட்டத்தை கைவிட வேண்டும். மற்ற இடத்தில் சுரங்கம் தொடங்க இந்திய புவியியல் ஆய்வு மையத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதியில் பத்தில் ஒரு பங்கு குறைவாக டங்ஸ்டன் சுரங்கம் பகுதி இருந்தபோதிலும் ஒட்டுமொத்த திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது பாமக நிலைபாடு. இத்திட்டத்தில் மத்திய, மாநில என இரண்டு அரசுகளும் துரோகம் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தார்.

The post வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article