
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மரிக்கோடு ஆதிவாசி கிராமத்தையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எழும்புக்கூடாக கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிவாசி மக்கள், குன்னூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அதன்பேரில் குன்னூர் வனத்துறையினர், போலீசாருடன் வனப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரனை நடத்தினர். தொடர்ந்து யார் என்றே அடையாளம் காணமுடியாத அளவுக்கு உடல் அழுகி, எலும்புக்கூடாக இருந்த காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லாமல், அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று பிரேத பரிசோதனை செய்ததில் ஆண் பிணம் என்பது தெரியவந்தது. இறந்தவர் யார்..?, வனவிலங்கு தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மற்ற விவரங்கள் தெரியவரும் என்றும் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் வனச்சரகர் ஆகியோர் தெரிவித்தனர்.