வன உயிரின வார விழாவை முன்னிட்டு மசினகுடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

3 months ago 20

ஊட்டி : வன உயிரின வார விழாவினை முன்னிட்டு தெங்குமரஹாடா பகுதியில் வனத்துறை சார்பில் மூங்கில் மற்றும் ஆல மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்விழா ஒரு வார காலம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் கள இயக்குநர் வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் மூங்கில் மற்றும் ஆலமர நாற்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், மசினகுடி மற்றும் சிங்காரா பகுதிகளில் உள்ள வன சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளனவா? என்பது குறித்து கேட்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆனைகட்டி மற்றும் தெங்குமரஹாடா பகுதியில் உள்ள ஊர் பொது மக்களிடம் வன உயிரினங்கள், மனித விலங்கின மோதல் குறித்து தனித்தனி குழுவாக பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

The post வன உயிரின வார விழாவை முன்னிட்டு மசினகுடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article