
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வந்தே பாரத் ரெயில் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரெயிலின் முன் கோச் சாதாரண ரெயில்களை விட எடை குறைவாம். ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்திற்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே' என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் தெற்கு ரெயில்வேயை டேக் செய்திருந்தார்.
இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான ரெயில் பயண அனுபவத்தை வழங்குகிறது. அதிவேகம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவை ஆகியவை இந்த ரெயிலின் தனிச்சிறப்புகளாகும். வந்தே பாரத் ரெயில்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த வகை ரெயில்களில் 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ரெயில்களின் முகப்பு பகுதிகளில், கால்நடைகள் மோதும் போதும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மோதினால், தூக்கி வீசும் வகையில், திறன் கொண்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் ஓடுவதைத் தடுக்க, இந்திய ரெயில்வே, நாடு முழுவதும் ரெயில் தண்டவாளங்கள் பகுதிகளில் வேலி அமைக்கிறது. இதுவரையில், 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரம் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேவையாக உள்ள மற்ற தண்டவாளங்களின் பகுதிகளிலும் வேலிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.