வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அமோகமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், பட்டுப்பூச்சி, தம்பிபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நெல், தென்னை விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேங்காய் விலை 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்கள் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக 2 மாதத்திற்கு ஒரு முறை தென்னை விவசாயிகள் தேங்காய்களை வெட்டி விற்பனை செய்வர். இது குறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு என்பது செழிப்பான பகுதியாகும். பெத்த பிள்ளை கைவிட்டாலும் வளர்த்த தென்னை வாழ வைக்கும் என்ற பழமொழிக்கேற்ப நாங்கள் தென்னை விவசாயத்தை அதிக அளவு நம்பியுள்ளோம். கடந்த சில மாதங்களுக்கு முன் 6 ரூபாய் முதல் 8 ரூபாய் என வாங்கப்பட்ட தேங்காய் தற்போது 15 ரூபாய் வரை விலை போவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் போதுமான விளைச்சல் இல்லாததால் கவலையாக உள்ளது என தெரிவித்தனர்.
The post வத்திராயிருப்பில் தென்னை விவசாயம் அமோகம் appeared first on Dinakaran.