வத்தலக்குண்டு, மே 8: வத்தலக்குண்டு பேரூராட்சியில் காந்தி நகருக்கு ஒரு சாலை மட்டுமே இருப்பதால் அங்கு பொதுமக்கள் வாகனநெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க இன்னொரு மாற்ற சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மாற்று சாலை அமைக்க ரூ.71.49 லட்சம் நிதியை வழங்கினர். இதை தொடர்ந்து வத்தலக்குண்டு கணவாய்ப்பட்டி சாலையில் சின்ன பள்ளிவாசல் சாலை, கே.கே.நகர் சாலை வழியாக காந்தி நகருக்கு மாற்று சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்து முதல்கட்டமாக கே.கே நகரில் பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில் துணை தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் சரவணகுமார், திமுக நகர செயலாளர் சின்னத்துரை, தலைமை எழுத்தர் முருகேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post வத்தலக்குண்டு காந்தி நகருக்கு மாற்று சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.