சென்னை: ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தியது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் திமுக ஆட்சி அமைந்த உடன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.8.2017 அடையாள வேலை நிறுத்தம்), 7.9.2017 முதல் 15.09.2017 வரை; 22.1.2019 முதல் 30.01.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக்காலமும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.
அந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. அந்த ஒழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனைச் சரிசெய்யச் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜாக்டோ ஜியோ போராட்டம் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு appeared first on Dinakaran.