நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

3 hours ago 1

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வந்தது. கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2021ல் கரும்பு விவசாயி சின்னத்திலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சி உரிய நேரத்தில் விண்ணப்பிக்க தவறியதால் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த கட்சி ஒன்றுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.22 சதவீத வாக்குகளை குவித்தது. இதனால் அங்கீரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது.

இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்த நிலையில், தங்களுக்கு புலி சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்தது. உயிருடன் இருக்கும் விலங்குகளை சின்னமாக ஒதுக்கீடு செய்யும் விதிமுறை இல்லை என்பதால், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து 3 சின்னங்களை வரைந்து அவற்றை தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சமர்ப்பித்தது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி நீண்ட நாட்களாக கேட்ட விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article