வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

3 hours ago 3

கூடுவாஞ்சேரி: வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றி போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரு புறமும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இதேபோல், தனியார் நிறுவனங்கள், கடைகள், கோயில் திருவிழாக்களை முன்னிட்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டே வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்து வந்தனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்னர். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து காவல் துறையினருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை, போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் தலைமையில் காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இதனை தடுக்க வந்த அரசியல் கட்சியினரிடம் அரசு அனுமதி இன்றி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

The post வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article