சென்னை, மார்ச் 29: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து விட்டு செல்வது வழக்கம். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உலாவிடத்தில் இருந்த வீரா என்ற ஆண் சிங்கம் மர்மமான முறையில் நேற்று மாலை உயிரிழந்து கிடந்தது. இதனை கண்டதும் சிங்கங்கள் பராமரிப்பாளர் பூங்காவில் உள்ள அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சிங்கம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூங்காவில் உள்ள வன விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பூங்காவில் உள்ள ஊழியர்கள், ‘‘சமீப காலமாக பூங்காவில் வன உயிரினங்கள் உயிரிழப்பை மறைத்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கூறும் ஊழியர்களை மிரட்டுகின்றனர். வேலையை விட்டு நிறுத்தி பழிவாங்கும் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். நேற்று மாலை உயிரிழந்த வீரா என்ற ஆண் சிங்கம் வாயில் ரத்தம் கக்கிய படியும், மஞ்சள் சிகப்பு கலந்த சிறுநீர் கழித்தபடியும் உடல் மெலிந்த நிலையில் எலும்பு தோலுமாக மர்மமான முறையில் இறந்து கிடந்தது’’ என்றனர். இதையடுத்து உயிரிழந்த ஆண் சிங்கம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பூங்கா வளாகத்திலேயே நேற்று இரவு 7.30 மணி அளவில் புதைக்கப்பட்டது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் பூங்காவுக்குள் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மர்ம சாவு appeared first on Dinakaran.