சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பல ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பூங்காவில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. பூங்காவை சுற்றிப்பார்க்க சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பூங்காவில் உள்ள 9 வயது ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற 9 வயது ஆண் புலிக்கு கழுத்தின் வலது பக்கத்தில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை வாயு மயக்க மருந்துகளின் மூலம் செய்யப்பட்டது. கட்டி கவனமாக அகற்றப்பட்டது. அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, கட்டிக்கு செல்லும் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டது. நகுலன் சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களால் கவனமாக கண்காணிக்கப்பட்டது. மறுநாளே வழக்கமாக வழங்கப்படும் உணவு உட்கொண்டு சுறுசுறுப்பாக காணப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த இடம் நன்றாக குணமடைந்து வருகிறது. தற்போது புலி நன்றாக இருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 வயது ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.