
சென்னை,
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணி இணைந்துள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சுந்தர் சி, "நானும், வடிவேலும், இணைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம். 2003-ல் வடிவேலுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன்.ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா? என்று இன்னும் அவரைப் பார்த்து வியந்துக்கொண்டிருக்கிறேன். படத்தில் ஒரு சாதாரணக் காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் அற்புதமாக இருக்கும்.
நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான். ஒரு காட்சிக்கு நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவிகிதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார். அதனால் எல்லா நடிகர்களுக்கும் இவர் மாஸ்டர் க்ளாஸ் என்று சொல்லலாம். ஒரு மனிதன் இத்தனை வருடங்களாக சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. வடிவேலு மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது. அது அவர் இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்ததுதான். அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் எத்தனை படங்களை நாம் ரசித்திருந்திருப்போம். இனிமேல் அவரைப் பார்த்து சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது என எல்லோரும் சொல்ல வேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, தங்கள் இருவரையும் யாரோ பிரிந்துவிட்டதாக நகைச்சுவையாகக் கூறினார்.