வடலூர்:வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் உள்ளது.அதில் சத்திய ஞான சபை, சத்திய தர்மச்சாலை நிறுவினார். வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 154 வது தைப்பூச ஜோதி தரிசன விழா 11ம் தேதி நடைபெறுகிறது.ஜோதி தரிசனம் காண்பதற்காக தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடுகள்,பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 11 ம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வடலூர் காவல்துறை சார்பில் தற்காலிக கார், வேன் மற்றும் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து வடலூர் வள்ளலார் தைப்பூசம் காண வரும் சன்மார்க்க அன்பர்கள் ஆண்டிக் குப்பம் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியில் இருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் அதே சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரி எதிரில் உள்ள இடத்திலும், விருத்தாசலம் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆர்ச் வழியாக வீணங்கேணி பகுதியில் உள்ளஇடத்திலும் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் . மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் இருக்கும் இடங்களில் இருந்து வள்ளலார் ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க அன்பர்களுக்கு தற்காலிக பேருந்துகள், மினிபேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் அன்று சென்னை, கடலூர் ,திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர ஊரில் செல்லும் பேருந்துகள் ,கார்,வேன், 11ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வடலூர் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் இடது புறமாக திரும்பி ராசாக்குப்பம், கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும்.
விருதாச்சலத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச் கேட், கொள்ளுக்காரன் குட்டை ,சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூர் செல்ல வேண்டும். பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் கொள்ளு காரன்குட்டை, சத்திரம்,மீனாட்சி பேட்டை, குறிஞ்சிப்பாடி, ராசாக்குப்பம் வழியாக வந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். இதேபோல் கும்பகோணத்திலிருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் சேத்தியாத்தோப்பு,கருங்குழி கைக்காட்டி,ராசாக்குப்பம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிபேட்டை, சத்திரம், கொள்ளுக்காரன் குட்டை வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடலூர் -பண்ருட்டி செல்லும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் வடலூர் காவல் ஆய்வாளர் உதயகுமார், நெய்வேலி நகர காவல் உதவி ஆய்வாளர் அழகிரி,வடலூர் உதவி ஆய்வாளர் ராஜாங்கம், வடலூர் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன், வடலூர் தனிப்பிரிவு தலைமை காவலர் அன்பரசன்,முத்தாண்டிக்குப்பம் தலைமை காவலர் பலராமன் ஆகியோர்கள் குழு தைப்பூசம் விழா நடைபெறும் சத்திய ஞானசபை பகுதிகள், மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் பகுதிகள் மற்றும் வடலூர் நகரப் பகுதி முழுவதும் ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வந்து செல்லும் பொதுமக்களுக்கான பாதுகாப்புகள் குறித்தான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
The post வடலூர் வள்ளலார் ஜோதி தரிசன பெரு விழாவை முன்னிட்டு வடலூரில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.