சென்னை: “நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டிஎன்பிஎஸ்சி மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தான் மிக மிக நேர்மையான அமைப்பா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது, பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ? என்ற ஐயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிகவும் வெளிப்படையாக நடைபெற வேண்டிய ஆள்தேர்வு முறை சந்தேக வளையத்தில் மீண்டும், மீண்டும் சிக்கிக் கொள்வது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.