வடமாநிலங்களில் சில நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

3 hours ago 1

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் டெல்லியில் இன்று கூறும்போது, வடமேற்கு இந்தியாவின் சில இடங்களில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலை இருக்கும். அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு உத்தர பிரதேசத்திலும் வெப்ப அலை பரவல் இருக்கும் என அவர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று காலை முதல் புழுதி படலம் பரவி தெளிவற்ற வானிலை காணப்பட்டது. தொடர்ந்து நாள் முழுவதும் இதே நிலை நீடித்தது.

வடமேற்கு இந்தியாவில் வடக்கு-தெற்கு உயர் அழுத்தம் விளைவாக பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வலிமையான மேற்பரப்பு காற்று வீசியது.

இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் புழுதி பரவியது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் தெளிவற்ற வானிலை காணப்பட்டது.

டெல்லியில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், 20-ந்தேதிக்கு பின்னர், 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் டெல்லியில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

Read Entire Article