வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

1 day ago 5

சென்னை: வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை, தன் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களில் ஒன்றான சென்னை, வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்திட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆணையரின் பொதுநல நிதி ரூ. 1.84 கோடி மற்றும் வடபழனி ஆண்டவர் கோயில் நிதி ரூ, 1.53 கோடி என மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்பீட்டில் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி முன்புற கல்மண்டபம் அமைக்கும் பணிகள், கோயிலின் மூன்று புறங்களிலும் நுழைவுவாயில்கள் அமைத்தல், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, திருக்கோயில் தக்கார்ஆதிமூலம், இணை ஆணையர் முல்லை, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோயில் துணை ஆணையர் ஹரிஹரன், மாநகராட்சி உறுப்பினர் ஏழுமலை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article