வடசென்னையை பொறுத்தவரை நிச்சயமாக வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் உருவாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

2 hours ago 1

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் ஏற்கனவே ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால், அந்த 1000 கோடி ரூபாயையும் தாண்டி பல்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு சுமார் 6309 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகள் 252. அந்த 252 பணிகளில் 29 பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. 166 பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளும் முடிவடைய இருக்கிறது. எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

தொடர்ந்து, நம்முடைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர், இந்த பகுதி எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நானும், இரண்டாவது முறையாக ஏற்கனவே, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டாலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். துணை முதல்வரையும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். வடசென்னையை பொறுத்தவரை இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டுக்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:
பெரியார் மீது இன்னும் விமர்சனம் வைத்து வருகிறார்களே அதுபற்றி?
பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏன் என்றால், பெரியார் தான் எங்களுக்கு தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர். அதனால், அதை நாங்கள் பெரிதுப்படுத்தவும் தயாராக இல்லை. பொருட்படுத்தவும் தயாராக இல்லை.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றி?
5ம் தேதி தேர்தல், 8ம் தேதி தேர்தல் முடிவு. அப்போது தெரியும்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன. கடந்த முறை தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.
அதுபற்றி?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த சொல்லியிருக்கிறோம். பார்ப்போம். நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகுதான் என்ன என்பது தெரியும்.
சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபற்றி?
வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை பெரிதாக பூதாகரமாக்குகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிற்சாலைகள் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆளுநர் அரசுக்கு எதிராக இருப்பதால்மக்களுக்கும் வேகம் வருகிறது
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு வருகிறார். அறிக்கை வெளியிடுகிறார். எக்ஸ் வலைதளத்திலும் குற்றச்சாட்டை வைக்கிறாரே?
ஒன்று, இரண்டு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் குற்றச்சாட்டு வைக்கிறாரே! அனைத்து பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. தொடர்ந்து அதை செய்ய வேண்டும். ஏன் என்றால், அதை செய்ய செய்யதான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்யட்டும், தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன்.

* காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் குறித்து தேடுதல் குழுவை ரத்து செய்து ஆளுநர் அறிவித்திருக்கிறாரே அதுபற்றி?
அவர் தொடர்ந்து இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வரும் 4ம் தேதி வழக்கு வருகிறது. அப்போது தெரியும்.

The post வடசென்னையை பொறுத்தவரை நிச்சயமாக வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் உருவாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article