புதுடெல்லி: வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதத்துக்குள் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
உள்நாட்டு பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. நாட்டின் பொருளாதார குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வரும் 2025-26 நிதியாண்டில் 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21 நிதியாண்டில் கொரானா பரவலின்போது மொத்த உள்ளநாட்டு உற்பத்தி (-) 5.8 சதவீதமாக சரிந்திருந்தது. 2021-22ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.7 சதவீதமாகவும், 2022-23ல் 7 சதவீதமாகவும் காணப்பட்டது.
இத்துடன் ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பானது மிக குறைந்த பட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நிதியாண்டின் 4ம் காலாண்டில், காரிப் அறுவடை சீசனில் காய்கறி விலை குறையும் என்பதால், உணவு பொருள் பண வீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. உலக அளவில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை மற்றும் வர்த்தக ரீதியாக ஸ்திரமற்ற தன்மை உள்ளபோதும், வரும் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
இருப்பினும், உலக பொருளாதார மந்தநிலைக்கேற்ப உத்திகள் மற்றும் கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியம். இதுபோல், உலக போட்டியை சமாளிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். ஏஐ தொழில்நுட்பத்துக்கான போதிய நெறிமுறைகள் இல்லாததால் , இதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
திவால் சட்டம் காரணமாக, ஆயிரக்கணக்கான கடன் பெற்ற நிறுவனங்கள் நிதி நெருக்கடி ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அதற்கு தீர்வு காண வழிவகுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல், வலுவான டாலர் மதிப்பு, சர்வதேச அரசியலில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகள் காரணமாகவே கடந்த ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2025-26 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.8 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.