வடசென்னையில் பகுதி செயலாளர் நியமனத்திற்கு ₹25 லட்சம் கேட்கும் மாவட்ட செயலாளர் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ லீக்: அதிர்ந்துபோன கட்சியினர்

3 hours ago 2

பெரம்பூர்: ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. தற்போது மேலும் தினகரன் அணி, சசிகலா அணி என நான்காக பிளவுப்பட்டுள்ளது. அவ்வப்போது அதிமுகவில் உள்ள பொறுப்புகளை நிரப்புவதற்கு மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பணம் வாங்கிக்கொண்டு பொறுப்புகளை தருவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதனை நிரூபணம் செய்வதுபோல பல நிகழ்வுகள் அதிமுகவில் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், வடசென்னையில் பகுதி செயலாளர் பொறுப்பிற்கு 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தற்போது ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சிடைந்து வருகின்றனர்.

வடசென்னை பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வியாசர்பாடி பகுதியில் இளங்கோ என்ற பகுதி செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை அந்த பொறுப்பிற்கு புதிய ஆள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த அவை தலைவர் ஒருவரும் இலக்கிய அணியை சேர்ந்த மற்றொருவரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் புதிய பகுதி செயலாளரை போடமுடியவில்லை, அதற்கு ரேட் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என ஒருவர் கூறுகிறார். மற்றொருவர், இப்போது போடமாட்டார்கள் மார்கழி மாதம் அடுத்த மாதம்தான் போடுவார்கள் என கூறுகிறார். மற்றொருவர், 20 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசிவைத்துள்ளார்கள்.

இதில் திருஞானத்திற்கு 5 லட்சம் ரூபாயும், அவருக்கு 20 லட்ச ரூபாயும் என கேட்டுள்ளார்கள் என கூறுகிறார். அதற்கு மற்றொருவர், கட்சியை விற்கிறார்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக விற்றுவருகிறார்கள். அதுதான் தற்போது வியாபாரம். பெண்கள்கூட, பணம் வாங்கிக்கொண்டுதான் போஸ்டிங் போடுகிறார்கள் என கேவலமாக கூறுகிறார்கள். எந்தளவிற்கு கட்சி கேவலமாக சென்றுகொண்டு இருக்கிறது. கட்சியின் லட்சணம் இந்த மாதிரி உள்ளது. பேஸ்புக்கில் அனைத்தையும் போட்டுவிடலாமா? என யோசிக்கிறேன்.

கட்சியை அசிங்கப் படுத்துகிறார்கள், பேஸ்புக்கில் போட்டாதான் அவனுக்கு சூடு, சொரணை வரும் என அந்த ஆடியோவில் இருவரும் பேசுகிறார்கள். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு பகுதி செயலாளர் நியமனத்திற்கு 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள் என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஆடியோவை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

The post வடசென்னையில் பகுதி செயலாளர் நியமனத்திற்கு ₹25 லட்சம் கேட்கும் மாவட்ட செயலாளர் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ லீக்: அதிர்ந்துபோன கட்சியினர் appeared first on Dinakaran.

Read Entire Article