வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.474.69 கோடி மதிப்பீட்டிலான 5 திட்டப்பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு: ரூ.59.15 கோடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

1 week ago 2

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.474.69 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, கன்னிகாபுரம் பகுதியில் ரூ.59.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ‘வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்’ கீழ், மாதிரி பள்ளிகளை மேம்படுத்துதல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள் கட்டுதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையங்களை நிறுவுதல், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் வாயிலாக பாதுகாப்பினை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமான பணி, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்கச் சாலையில் ரூ.2,097 கோடி மதிப்பீட்டிலான 87 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவடைந்து தற்போது ரூ.6,309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்களாக அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் 5 திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன் விவரம்:
* வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில், 1,25,402 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கடைகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
* சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில், திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் ரூ.59 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் தனி கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
* திரு.வி.க.நகர், கன்னிகாபுரத்தில் ரூ.12.69 கோடி மதிப்பீட்டில் 3.75 ஏக்கர் பரப்பளவில் 20,315 சதுர அடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
* வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், 678 மீட்டர் நீளம் மற்றும் 15.20 மீட்டர் அகலத்துடன், ரூ.226 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணேசபுரம் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
* ஸ்டான்லி மருத்துவமனை சாலையில், 3,26,612 சதுர அடி கட்டிட பரப்பளவில், வாகன நிறுத்தும் தளம் மற்றும் 9 தளங்களுடன் ரூ.160 கோடி மதிப்பீட்டில் இரண்டு தொகுதிகளாக கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். மேலும், தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.

The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.474.69 கோடி மதிப்பீட்டிலான 5 திட்டப்பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு: ரூ.59.15 கோடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Read Entire Article