
நெல்லை,
வடக்குபச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து அதன்கீழ் பாசனம் பெறும் 9592.91 ஏக்கர் நிலங்களுக்கு 23.12.2024 முதல் 31.03.2025 வரை 99 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் மற்றும் பச்சையாறு குறுக்கே உள்ள 8-வது அணைக்கட்டு முதல் 12-வது அணைக்கட்டு வரை உள்ள ஆயக்கட்டுகளுக்கு 4,711.83 ஏக்கர் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேவையின் அடிப்படையில் 48.73 மி. கனஅடி மட்டும்) நிலங்களுக்கும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள மொத்தம் 14,304.74 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.