
பர்மிங்காம்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் (24 ரன்), ஹாரி புரூக் (15 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான ஆட்டம் நேற்று நடைபெற்றது. தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டிய நெருக்கடியுடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். முதல் இன்னிங்சில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து மண்ணில், 10 விக்கெட் கைப்பற்றிய 2-வது இந்திய மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு இதே மைதானத்தில் சேத்தன் ஷர்மா 10 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவரது 10 ஆண்டு கால சாதனையை தற்போது ஆகாஷ் தீப் சமன் செய்துள்ளார்.