
கோவை
கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட் என்ற அப்துல் ஜாபர்(வயது 48). இவருடைய மனைவி சமீம் நிஷா (45). இவர்களுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அப்துல் ஜாபர் கூலி வேலை செய்து வந்தார்.
குடிபழக்கத்துக்கு அடிமையான அப்துல் ஜாபர், சரியாக வேலைக்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. சமீம் நிஷா லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. ஷாருக்கானும், அவருடைய சகோதரியும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அப்துல் ஜாபர் வீட்டின் அருகே வசிப்பவர்கள் ஷாருக்கானின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பெற்றோர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினர். இதனையடுத்து உடனே அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் ஒருவித துர்நாற்றம் வீசியது. உடனே அவர் தனது தாயாரிடம் ஏன் இவ்வளவு அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்று கேட்டார். அதற்கு அவர் பூனை ஏதாவது செத்துக்கிடக்கும் என்று கூறினார்.
ஆனால், அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அப்துல் ஜாபர் கட்டிலில் படுத்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், அப்துல் ஜாபர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து 5 நாட்கள் இருக்கும். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது கணவர் உயிரிழந்ததுகூட தெரியாமல் அவருடைய பிணத்துடன் 5 நாட்கள் வசித்து வந்து உள்ளார் என்றனர். கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய பிணத்துடன் 5 நாட்கள் மனைவி இருந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.