வடகிழக்கு பருவமழையையொட்டி அரசு முன்னெச்சரிக்கையால் பாதிப்பிலிருந்து தப்பிய மக்கள்:  மழைநீர் வடிய கைகொடுத்த வடிகால்வாய்கள்  மாநகராட்சி ஊழியர்களும் துரித நடவடிக்கை

1 month ago 4

சென்னை, அக். 17: சென்னை…என்றாலே வந்தாரை வாழவைக்கும் சென்னை என வாயார அனைவரும் போற்றுவார்கள். அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையை சபிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு சென்னை மக்கள் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னையில் வந்து தங்கி ஆங்காங்கே ஆளுயர கட்டிடங்களை கட்டியுள்ளனர். அந்த அளவிற்கு இங்கு மக்கள் தொகை பெருத்துள்ளது.

எவ்வளவுதான் வசதிகள் செய்து கொடுத்தாலும் இயற்கையின் முன்பு எதுவும் நிலைக்காது என்பதற்கு ஏற்ப அடிக்கடி சென்னைவாசிகளை ஆண்டிற்கு இருமுறையாவது இயற்கை எச்சரித்துக்கொண்டே உள்ளது. இவ்வளவு பெரிய சென்னையில் இவ்வளவு மக்கள் தொகை வாழும் இந்த மண்ணில் மொத்தமாக தண்ணீர் வெளியேற 4 வழிகளே உள்ளன. எண்ணூர் முகத்துவாரம், நேப்பியர் பிரிட்ஜ் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் ஒக்கியம் வழியாக கோவளம் முகத்துவாரம் என 4 வழிகளில் மட்டுமே மழைநீர் வெளியேறுகிறது.

ஒரே நேரத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் இந்த வழியில் மட்டுமே நீர் செல்ல வேண்டும். எனவே நீர் வெளியே செல்வதில் எப்போதுமே சென்னைக்கு சிக்கல் உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு பாடங்களை கற்றுத் தேர்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் வீடுகளுக்குள் மழைநீர் வருவதும், அவர்கள் முகாம்களில் தஞ்சம் அடைவதும், மழை விட்டவுடன் மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை கொஞ்சமாவது மாற்ற வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு அவை ஓரளவிற்கு கைகொடுத்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு இடங்களிலும் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை முழுமையாக இழந்தனர். பல ஆயிரம் அல்லது லட்சங்களை தங்களது வாகனங்களுக்காக செலவு செய்தனர். பல வாகனங்கள் ஸ்கிராப் விலைக்கு விற்கப்பட்டன. சென்ற முறை மழைவிட்ட பின்பும் அடுத்த ஒரு மாதத்திற்கு கார் மெக்கானிக் ஷோரூம்கள் மற்றும் பைக் மெக்கானிக் ஷோரூம்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மேலும் வீட்டில் உள்ள உடைமைகளையும் மழை வெள்ளத்தில் மக்கள் இழந்தனர். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழக் கூடாது என்பதற்காக சென்னை மக்களும் சரி, அரசு அதிகாரிகளும் சரி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த மழை காலத்திற்கு மேற்கொண்டனர்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே உஷாரான அரசு பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தது. எப்போதும் தாமதமாக அதாவது நவம்பர் மாதத்தில் மட்டுமே பெரும் மழைைய எதிர்பார்த்து வந்த மக்களுக்கு தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குகின்ற நாளே பேரிடியாக அமைந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடனே சென்னையில் மட்டும் சுமார் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீண்டும் மிதக்கப் போகிறது, மக்கள் அவதிக்குள்ளாகப் போகின்றனர் என அனைவரும் பயந்தனர். ஆனால் அப்படி எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. மழை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அரசு பொதுமக்களுக்கு சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மூலம் தொடர்ச்சியாக அறிவுறுத்தியது. இதனால் மழை வருவதற்கு ஒரு நாள் முன்பே சென்னை மக்கள் உஷார் ஆகினர்.

குறிப்பாக கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை தண்ணீர் வராத இடத்திற்கு கொண்டு போய் விட்டனர். வேளச்சேரி மேம்பாலம், அடையாறு பிரிட்ஜ் உள்ளிட்ட பல இடங்களில் வரிசையாக இருபுறமும் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் நிற்பதை நாம் பார்த்திருப்போம். இதன் மூலம் வாகனங்களை பாதுகாத்துக் கொண்டனர். மேலும் வீடுகளில் உள்ளவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் வைத்தனர். அதிலும் குறிப்பாக மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களை முதல் தளத்திற்கு ஏற்றி விட்டனர். வடசென்னை பகுதிகளான ஓட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்களை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.

எம்கேபி நகர் மேம்பாலம் பகுதி குறுகிய மேம்பாலமாக இருந்தாலும் ஒரு பக்கம் முழுவதும் கார்கள் நிற்பதை காண முடிந்தது. இதேபோல ஓட்டேரி ஸ்டாரன்ட்ஸ் சாலையில் உள்ள நார்த் டவுன் எனப்படும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சென்ற மழைக்கு கிரவுண்டு ப்ளோர் எனப்படும் தரைதளத்தில் கார்களை விட்டிருந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட கார்கள் முழுவதுமாக மூழ்கி நாசம் அடைந்தன. இதனால் இம்முறை முன்கூட்டியே விழித்துக்கொண்ட மக்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முதல்தளம், இரண்டாவது தளம் என அனைத்து தளங்களிலும் கார் எங்கெங்கு விட இடம் உள்ளதோ அந்த இடத்திற்கு கொண்டு சென்று தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பார்க்கிங் செய்தனர்.

இதன் மூலம் பெரிய அளவில் எந்த பாதிப்பும் அங்கு ஏற்படவில்லை. இதேபோன்று மளிகைக்கடை, காய்கறிக்கடை என பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மாலையே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதை நாம் கண்டோம். அந்த அளவிற்கு பொதுமக்கள் கடினமான சூழ்நிலையில் வாழ பழகிக் கொண்டனர். அதேபோன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஓரளவிற்கு முடிக்கப்பட்டு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீர் வடிகால் சென்னைக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது.

மேலும் மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் தங்கள் பங்கிற்கு கடந்த 2 நாட்களில் அளப்பரிய சேவையை வழங்கி சென்னையை பெருமழையில் இருந்து மீட்டெடுத்து வந்துவிட்டனர். மழைநீர் வடிகால் குழாய்களில் குப்பையை கொட்டாமல் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை அறவே தவிர்ப்பது, குப்பையை மொத்தமாக கொட்டாமல் தரம் பிரித்து தருவது போன்ற பணிகளில் சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருங்காலங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் மழைநீர் மிக விரைவில் வெளியேறி அது மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும்.

The post வடகிழக்கு பருவமழையையொட்டி அரசு முன்னெச்சரிக்கையால் பாதிப்பிலிருந்து தப்பிய மக்கள்:  மழைநீர் வடிய கைகொடுத்த வடிகால்வாய்கள்  மாநகராட்சி ஊழியர்களும் துரித நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article