வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

3 months ago 17

*கால்வாய்களை தூர்வார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

வேலூர் : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநருமான விஜயகார்த்திகேயன் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 காட்பாடியில் முத்தமிழ் நகர் மற்றும் நேரு தெருவிற்கு இடையே உள்ள கால்வாய் மற்றும் சாலையில் கால்வாய் கடக்கும் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தேவையற்ற கழிவு பொருட்களை அவ்வப்போது அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.பின்னர் வேலூர் காட்பாடி சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்களிடம் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் ஒரு பகுதியான கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் எத்தனை இடங்களில் முடிவுற்றுள்ளன என கேட்டறிந்தார்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய கால்வாயாக உள்ள நிக்கல்சன் கால்வாய் கடந்து செல்லும் பகுதிகளான கன்சால்பேட்டை, மாங்காய்மண்டி மற்றும் திடீர் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நிக்கல்சன் கால்வாய் சாலை மற்றும் தெருக்களை கடக்கும்போது அமைந்துள்ள பாலங்களை தூர்வார வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் தூர்வாரும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் சுப்புலட்சுமி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி உட்பட பலர் இருந்தனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article