வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்

1 month ago 8

* மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போது முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் பணிகளால் தடைபட்ட மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளும் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டு சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாலும், புறநகர் பகுதிகளில் பருவமழை காலங்களில் வெள்ள நீர் சூழ்வது வாடிக்கையாக உள்ளது.

எனவே, சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளதுடன், தங்கள் பகுதிகளுக்கு தேவையாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 792 கி.மீ. நீளத்திற்கு வடிகால்களை தூர்வாரும் பணி நடந்து முடிந்துள்ளது. 1152 கி.மீ. நீள பணிகள் வரும் 10ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.

53.48 கி.மீ. நீளமுள்ள 33 கால்வாய்களில் 12 இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. 73,180 கசடு அகற்றும் குப்பிகள் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன. 784.96 கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கட்டப்பட்டுள்ளது. 350 கி.மீ. நீளத்திற்கு மேலும் கொசஸ்தலை ஆறு, கோவளம் பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, நிவாரண முகாம்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், திருவொற்றியூர், மணலி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களாக உள்ளது.

இதுபோன்ற மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் படகுகளை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மழைக்காலங்களில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களை கவனித்து அங்கு தேவையான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் பருவமழையின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர் தன்னார்வலர்களை பதிவு செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. மொத்தம் 10,000 தன்னார்வலர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு, மழையால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புவாசிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உதவும் வகையில், ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களை ஒட்டி அமைந்துள்ள 2 லட்சம் வீடுகளை அடையாளம் காணும் பணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. இந்த வீடுகளில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த பணிகள் வரும் 10ம் தேதி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 162 நிவாரண முகாம்கள்
சென்னையில் மழையால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் 6 சுரங்கப்பாதைகள் உள்ள நிலையில் அவற்றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

* 990 மோட்டார் பம்புகள்
மழைக்காலம் வந்த காரணத்தால் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை வெட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன. இதில், அதிக திறன் கொண்ட 100 பம்புகள் புதிதாக வாங்கப்பட்டவை. விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

* கட்டுப்பாட்டு மையம்
சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையல் கூடங்களில் மணிக்கு 1500 பேருக்கு உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் புயல் மற்றும் மழைநீர் அகற்றும் அவசர பணிகளுக்கு 5 பேர் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து மழை தொடர்பான புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article