வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் குமரியில் அறுவடை பணி பாதிப்பு

3 months ago 16

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ அறுவடை பணி நடந்து வருகிறது. தேரூர், பறக்கை, புத்தளம், சுசீந்திரம், வடசேரி பகுதியில் அறுவடை பணி முடிந்து தற்போது கும்பபூ சாகுபடி பணியும் நடந்து வருகிறது. இதனை தவிர கன்னிப்பூ சாகுபடி பணி தாமதமாக தொடங்கிய மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. வேம்பனூர், கல்படி பகுதியில் வயல்களில் அறுவடை பணி முடிந்து நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மணவாளகுறிச்சி அருகே உள்ள பெரியகுளம் ஏலாவில் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது. இதுபோல் ஈசாந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணி நடக்கிறது. ஆனால் கடந்தி சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் அறுவடை பணி நடந்து வரும் பகுதியில் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி ஈசாந்திமங்கலம், பெரியகுளம் ஏலாவில் அறுவடை பணி நடந்தது. ஆனால் மதியத்திற்கு மேல் கார்மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்தது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. கடைவரம்பு பகுதியான தெங்கம்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவடை பணி நடந்து வருகிறது. மாழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்கள் சாய்ந்து கிடக்கிறது. மழை தொடர்ந்து பெய்யும்போது சாய்ந்து விழுந்து வயல்களில் மகசூல் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பகுதியில் அறுவடை பணி முடிந்து கும்பபூ சாகுபடி பணி தொடங்கி நடந்து வருகிறது. கன்னிப்பூ அறுவடையின்போது நெல்லிற்கு நல்லவிலை கிடைத்துள்ளது. ஆனால் மகசூல் என்பது குறைவாகவே இருந்தது. தற்போது அனந்தனார் சானலை நம்பியுள்ள சிறமடம், ஈசாந்திமங்கலம், இறச்சகுளம், திட்டுவிளை, கணியாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணி நடந்து வருகிறது.

மழை பெய்யும்போது அறுவடை பணியை நிறுத்திவைத்துவிட்டு, மழைநின்று ஒரு மணிநேரம் வெயில் அடித்தவுடன் அறுவடை பணி மீண்டும் நடந்து வருகிறது. மழையின்போது ஈரப்பதம் இருந்தால் அறுவடை செய்யும்போது வைக்கலில் உள்ள நெல் மணிகள் தனியாக பிரிந்து வருவது இல்லை. இதனால் வெயில் அடித்தவுடன் அறுவடை பணி தொடங்கிவிடும். தற்போது மழைசீசன்தான் இருப்பினும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால், அறுவடை பணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

The post வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் குமரியில் அறுவடை பணி பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article