வடகிழக்கு பருவமழை: சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி

1 month ago 9

சென்னை,

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை சென்னை எதிர்கொள்ளும். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சொந்தமாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 படகுகள் மாதவரம் மற்றும் பெருங்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவசர கால தேவைகளுக்காக மீனவர்களிடம் இருந்து 80 படகுகளும் வாங்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்க இந்த சிறிய ரக படகுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

நிவாரண முகாம்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மேலும், தேவையான எந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அழைப்பு விடுத்துள்ளார். https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். தன்னார்வலர்களுக்கு அவர்கள் துறைகள் சார்ந்த பணிகள் வழங்கப்படும் எனவும், அவர்கள் அனைவருக்கும் மண்டல அலுவலர்கள் வழிகாட்டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article