
மாஸ்கோ,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 175வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
அதேவேளை, 15ம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், புதின் அழைப்பை உக்ரைன் ஏற்றுள்ளது. அதன்படி, துருக்கியின் அங்காராவில் நாளை உக்ரைன், ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார். மேலும், இருநாட்டு முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
அதேவேளை, இந்த பேச்சுவார்த்தையில் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெலன்ஸ்கி துருக்கி செல்வது உறுதியாகியுள்ள நிலையில் புதின் அங்கு செல்வது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் துருக்கி சென்றால் நானும் துருக்கிக்கு சென்று அவரை சந்திப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.