வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

3 months ago 16

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என்று தெரிகிறது. அதனால் மழைநீர் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என ஏற்கனவே செய்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும்வகையில் புதிய பணிகளை எடுப்பதற்கு முன், நாம் ஏற்கெனவே எடுத்து முடிக்காமல் உள்ள பணிகளை செய்து முடிக்கும்படி வலியுறுத்துகிறேன். தாழ்வான பகுதிகள், மழை காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல் நம்மிடம் வார்டு வாரியாக உள்ளன. அதனால் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள், மக்களை காப்பாற்றி அழைத்து வருவதற்கான படகுகளை ஒரே இடத்தில் வைத்திராமல் அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே பிரித்து வழங்கி பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். மக்களுக்கு உணவு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க, எங்கெல்லாம் மழை நீர் அதிகமாக தேங்குமோ அதற்கு அருகிலேயே சமையற்கூடங்களை அமைத்து சமைத்து வழங்கினால் மக்களுக்கு உரிய நேரத்தில் நம்மால் உணவு வழங்க முடியும்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல்போன்களும் செயல்படவில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ள ஒருவரை மற்றவர்கள் தொடர்புகொள்ள மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்துவதற்கு வயர்லஸ் போன்களை வழங்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் பகுதிகள், நிவாரண மையங்கள், மோட்டார்கள், படகுகள் உள்பட நம்மிடம் கையிருப்பில் உள்ள உபகரணங்கள், சமையற் கூடங்கள், தன்னார்வலர்கள் குறித்த விவரங்கள் என ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடைய சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளை மேலும் பலப்படுத்துவது மிக அவசியமாகும். ‘மக்கள் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் அதிகாரிகளும் நம்முடன் களத்தில் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், ‘அரசாங்கம் நம்முடன் நிற்கிறது. இந்த மழையை சமாளித்துவிடலாம்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நம் பணிகளை அமைத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், உயர் அதிகாரிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் கலெக்டர்கள், எம்எல்ஏக்கள் சுதர்சனம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, த.வேலு, அரவிந்த்ரமேஷ், ஜோசப் சாமுவேல், கணபதி, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், நா.எழிலன், பரந்தாமன், வெற்றிஅழகன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, எபினேசர், பிரபாகரராஜா, ஹசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article