
வடகாடு,
வடகாடு காவல் சரகத்தில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது சம்மந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எக்ஸ் வலைதளத்தில் வடகாடு காவல் சரகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியில் விடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவி வருகிறது.
மேற்படி சம்பவமானது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம். வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே 05.05.25-ம் தேதி சுமார் 21.30 மணியளவில் இரு சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி ஒரு தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், இன்னொரு தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே எக்ஸ் வலைதளத்தில் இருசமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை, வடகாடு சுற்றிய கிராமங்களில் செயல்பட்டு வரும் 3 அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.