புதுடெல்லி: டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாட பிரதமர் மோடி பாஜ தலைமையகத்திற்கு நேற்று மாலை வந்தார். அவருக்கு பாஜ தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜவின் வெற்றியையும், பேரழிவிலிருந்து (ஆம் ஆத்மியை குறிப்பிட்டார்) விடுபட்டதையும் டெல்லி மக்கள் கொண்டாடுகின்றனர்.
மோடியின் உத்தரவாதம் மீது நம்பிக்கை கொண்டதற்காக ஒவ்வொரு டெல்லிவாசிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இன்றைய வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்கது. 10 ஆண்டுகால பேரழிவில் இருந்து டெல்லி விடுபட்டுள்ளது. வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, நம்பிக்கைக்காக பாஜவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். டெல்லியின் உண்மையான உரிமையாளர் டெல்லி மக்கள் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். டெல்லியை தங்களின் சொத்தாக நினைத்தவர்களை நிராகரித்துள்ளனர்.
இந்த தீர்ப்பிலிருந்து அரசியலில் குறுக்குவழிகள், பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது. 21ம் நூற்றாண்டில் டெல்லியில் பிறந்தவர்கள் பாஜவின் நல்லாட்சியைக் காண்பார்கள். இப்போது டெல்லியில் இரட்டை இன்ஜின் நிர்வாகம், இரட்டை வளர்ச்சியை உறுதி செய்யும். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, டெல்லி என்சிஆரின் ஒவ்வொரு மாநிலத்திலும் (ராஜஸ்தான், உபி, அரியானா) பாஜ ஆட்சிக்கு வந்துள்ளது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த அனைத்து இடங்களிலும், அந்த மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். அதனால்தான் பாஜ தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மக்கள் 2வது, 3வது முறையாக எங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தலைநகரில் தொடர்ந்து 6 தேர்தலில் பூஜ்ஜியத்தை பெற்ற காங்கிரஸ் இரட்டை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. அவர்கள் தோல்வியில் தங்களுக்கு தாங்களே தங்கப்பதக்கத்தை கொடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நாடு காங்கிரசை நம்பத் தயாராக இல்லை என்பது தான் உண்மை. காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்டது. அக்கட்சி தனது கூட்டணி கட்சிகளையும் மூழ்கடித்து வீழ்த்துகிறது. காங்கிரஸ் தன்னுடன் கூட்டணி சேர்ந்தவர்களின் ஒவ்வொருவரின் கதையை முடித்து வருகிறது. அவர்களின் வாக்கு வங்கியை சிதைத்து பறிக்க முயற்சிக்கிறது. காங்கிரசுடன் கைகோர்ப்பவர்களின் அழிவு தவிர்க்க முடியாதது என்பது உபி, பீகார், காஷ்மீர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மூலம் தெளிவாகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் முன்பு இருந்தது போல் இல்லை. இப்போது அது நகர்ப்புற நக்சல்களின் அரசியலில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடுவதாக பேசுகிறார்கள். அது நக்சல்களின் மொழி. எனவே, நாட்டிற்கு இப்போது தீவிர அரசியல் மாற்றம் தேவை. வஞ்சகம், முட்டாள்தனமாக அரசியல் தேவையில்லை. வளர்ந்த இந்தியாவுக்கு புதிய ஆற்றல் தேவை. 21ம் நூற்றாண்டு அரசியலுக்கு புதிய யோசனைகள் தேவை. அதற்காக இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் நுழைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post வஞ்சகம், முட்டாள்தனமான அரசியலுக்கு முடிவுகட்ட இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.