வங்கியில் வாங்கிய கடனை மறைத்து சென்னை தொழிலதிபருக்கு ரூ.2.50 கோடிக்கு பழைய கார் விற்ற டாக்டர் கைது: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

14 hours ago 2

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக்(35). இவருக்கு, கடந்த 2017ம் ஆண்டு அரும்பாக்கத்தை சேர்ந்த ரோஷன் மற்றும் டாக்டர் ரோஹித் சகோதரர்கள் பழக்கமாகினர். அபிஷேக் விலை உயர்ந்த சொகுசு கார் வாங்குவது குறித்து ரோஹித்திடம் தெரிவித்தார். அவர் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி, அபிஷேக் கடந்த 2020ம் ஆண்டு 3 தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடி பணத்தை டாக்டர் ரோஹித்திடம் கொடுத்தார். அதன் பிறகு ரோஹித் தனது பெயரில் டெல்லியில் வங்கி மாத தவணையில் வாங்கிய பென்ஸ் சொகுசு காரை அபிஷேக்கிற்கு விற்றுள்ளார்.

ஆனால் ரோஹித் வாங்கிய காருக்கு வங்கியில் மாத தவணை கட்டவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் தொழிலதிபர் அபிஷேக் வாங்கிய சொகுசு காரை பறிமுதல் செய்ய வந்துள்ளனர். அப்போது அதிகாரிகளிடம் அபிஷேக் தான் வாங்கிய காருக்கான பணம் அதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தங்களை வங்கி அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். அதைதொடர்ந்து அபிஷேக் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அருணிடம் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி, தொழிலதிபரிடம் ரூ.2.50 கோடி பணம் பெற்று மோசடி செய்த ரோஷன் மற்றும் டாக்டர் ரோஹித் ஆகியோர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து வங்கியில் வாங்கிய கடனை மறைத்து தொழிலதிபருக்கு சொகுசு காரை விற்ற டாக்டர் ரோஹித்தை நேற்று நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் ரோஷனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post வங்கியில் வாங்கிய கடனை மறைத்து சென்னை தொழிலதிபருக்கு ரூ.2.50 கோடிக்கு பழைய கார் விற்ற டாக்டர் கைது: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article