புதுடெல்லி, மார்ச் 30: ஏடிஎம்மில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 முதல் ரூ.23 வரை கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே பதிவு:
நமது வங்கிகள் துரதிஷ்டவசமாக மோடி அரசால் கலெக் ஷன் ஏஜென்ட் ஆக்கப்பட்டுவிட்டன. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2024 க்கு இடையில், சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றிலிருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து குறைந்தபட்சம் ₹43,500 கோடியைப் பெற்றுள்ளது.
தற்போது மக்களிடம் கொள்ளையடிக்க வங்கிகளில் நடைமுறையில் உள்ள மற்ற கட்டண முறைகள் விவரம்:
- ஒரு வங்கி கணக்கு செயல்படாமல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் ₹100 முதல் ரூ.200 வரை கட்டணம்.
- வங்கி மாத அறிக்கை வழங்குவதற்கான கட்டணம் ₹50-100.
- எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்ப காலாண்டு கட்டணமாக ₹20-25 வசூலிக்கப்படுகிறது.
- வங்கிகளில் கடன் பெறுவதற்கான கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.
- வாங்கிய கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால், கடனை முடிப்பதற்கும் முன் கட்டணம் விதிக்கப்படும்.
- நெப்ட், டிமாண்ட் டிராப்ட் கட்டணங்கள் கூடுதல் சுமை.
- கேஒய்சி தகவலை அப்டேட் செய்யும் போது, கையொப்பத்தை மாற்றினாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக, ஒன்றிய அரசு இந்த கட்டணங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தொகையின் தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கியது. இப்போது ரிசர்வ் வங்கி அத்தகைய தரவுகளை பராமரிக்கவில்லை என்று கூறி நிறுத்தப்பட்டுள்ளது. வேதனை தரும் விலைவாசி உயர்வு + கட்டுக்கடங்காத கொள்ளை = மிரட்டி பணம் பறிக்கும் பாஜவின் மந்திரம். இவ்வாறு கூறியுள்ளார்.
The post வங்கிகள் கலெக்ஷன் ஏஜென்ட்டுகளாக மாற்றம்; ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.23 கட்டணம் வசூலிப்பதா?: கார்கே கடும் கண்டனம் appeared first on Dinakaran.