
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபையில் பேசிய அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன்னை எதிர்கொள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை என்று விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-
"பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். அதனால்தான் நான் பேசும் போதெல்லாம் அவர்கள் சபையை புறக்கணிக்கிறார்கள். நான் முஸ்லிம் லீக் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
நான் மதசார்பின்மை, ஒற்றுமையான வாழ்வு மற்றும் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அண்டை நாட்டில் பதற்றமான சூழல் நிலவிய போதும், மேற்கு வங்காளத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதி செய்தது திரிணாமுல் காங்கிரஸ் அரசுதான்.
வங்கதேச பயங்கரவாதிகள் அல்லது அடிப்படைவாதிகளுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. நிரூபித்தால், எனது பதவியை நான் ராஜினாமா செய்வேன். பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்பு பேச்சை பரப்பி, மக்களை பிரிப்பது அல்ல."
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.