பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ' பீல்ட் மார்ஷல்' பதவி

4 hours ago 3

இஸ்லாமாபாத்,

கடந்த 2022 முதல் பாகிஸ்தானின் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பீல்ட் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜெனரல் சையத் அசிம் முனீரை பீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு அளிக்க பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். கடந்த ஏப்., 17ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் 'இரு நாடு கோட்பாடு' என மத அடிப்படையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சு தான் பஹல்காம் தாக்குதலுக்கு தூண்டுகோலாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இருந்தபோதிலும் இந்தியாவுடன் நடந்த சண்டையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என பொய்யான தகவல்களை அந்நாட்டு மக்கள் மத்தியிலும், சர்வதேச ஊடகங்களிலும் பாகிஸ்தான் ராணுவம் பொய்களை பரப்பி வருகிறது. இந்த சூழலில் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ' பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article