வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு; ஜூலை போராட்ட பிரகடனம் விரைவில் தயார் செய்யப்படும்: மாணவர்கள் அழுத்தத்தால் பணிந்தது

3 weeks ago 3

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதன் பின் ெபாருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறது. இந்த நிலையில், ஹசீனா ஆட்சியை கவிழ்த்த பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத்தினர், வங்கதேசத்தில் 1972ல் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக ஜூலை போராட்ட பிரகடனம் வெளியிடப்பட்டு, 1972 அரசியலமைப்பு சட்டம் புதைக்கப்படும் என மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா கடந்த 29ம் தேதி பேசினார்.

இதைத் தொடர்ந்து மாணவர் அமைப்பினரின் ஜூலை போராட்ட பிரகடனம் தயார் செய்யப்பட்டு அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டது. நேற்று இந்த பிரகடனம் வெளியிடப்பட இருந்தது. இது தனிப்பட்ட நடவடிக்கை என்றும் இதற்கும் வங்கதேச அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இடைக்கால அரசு அறிவித்தது. இதனால் நேற்று அதிகாலை மாணவர்கள் அவசர கூட்டத்தை நடத்தி பிரகடனத்திற்கு பதிலாக ஒற்றுமைக்கான பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.

இதனால் மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அரசின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த தலைமை ஆலோசகர் முகமது யூனுசின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம், ‘‘ஜூலை போராட்டத்தின் பிரகடனம் ஒருமித்த கருத்துடன் சில நாட்களில் தயார் செய்யப்படும். மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்து இப்பிரகடனம் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்’’ என கூறினார்.

The post வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு; ஜூலை போராட்ட பிரகடனம் விரைவில் தயார் செய்யப்படும்: மாணவர்கள் அழுத்தத்தால் பணிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article